தமிழகத்திற்கு நீர் திறக்க பரிந்துரை

புதுடெல்லி/ஜன. 19: பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவுஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசின் தரப்பில், “உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு ஜனவரி மாதத்திற்குள் 165.95 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 75.383 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 90.532 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 33.495 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது.குடிநீர் தேவைக்காக தினமும் 600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு ஏற்றவாறு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகஅரசு நீரை திறந்துவிட வேண்டும்’’என கோரப்பட்டது.