Home Front Page News தமிழகத்தில் இரண்டு நாள் மழை

தமிழகத்தில் இரண்டு நாள் மழை

சென்னை ஏப்.9- வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி போன்றவை காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நகர்ந்து நாளை வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிலக்கக் கூடும்.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று முதல் 12-ம் தேதி வரையும், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 11-ம் தேதி வரையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version