தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

சென்னை: அக்டோபர் . 30 – கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் போலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 52 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு படையினரும், என்ஐஏ அதிகாரிகளும் கேரளா விரைந்துள்ளனர். இதர மத்திய, மாநில புலனாய்வு குழுவினரும் நேரடி மற்றும் ரகசிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை டிஜிபி சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார்.
குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இம்மாவட்டவனப்பகுதிகளில் தமிழக போலீஸாருடன் வனத்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தாலோ, அத்துமீறி நுழைய முற்பட்டாலோ அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில், பேருந்து, விமான நிலையங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்: இங்கு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் உள்ள 13கடலோர மாவட்டங்களில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சந்தேகப்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து அறிந்தால் அதுகுறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ளதங்கும் விடுதிகள், லாட்ஜிகளிலும்போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா, இங்கு வெடித்து சிதற கூடிய பொருட்கள் மற்றும் அதற்கான மூலப் பொருட்கள் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா எனவும் போலீஸார் சோதித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில், மசூதி, தேவாலயங்கள், பூங்காக்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில உளவு பிரிவு போலீஸாரும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
தமிழகம் எப்போதும் பாதுகாப்பான மாநிலம். எனவே, இங்கு எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.