தமிழகத்தில் நீர்வரத்து அதிகரிப்பு அணைகள் திறப்பு

சென்னை,நவம்பர்14 -குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகமாகி பெரும்பாலான அணைகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 200 கனஅடியாக அதிகரித்தது. வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவே உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நேற்றைய நீர்மட்டம் 50.25 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்தது. 5 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 142 அடி ஆகும். தற்போது 137.05 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,109 கனஅடி ஆக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது 70.01 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.