தமிழகத்தில் பிஜேபிக்கு வாக்கு அதிகரிப்பு

புதுடெல்லி: பிப். 26: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இதில், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் முதன்முதலாக வியூகம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர், முதன்முதலில் குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி தொடர பாஜகவுக்காக வியூகம் அமைத்தார். இதில் வெற்றிபெற்ற பாஜக, 2014 மக்களவை தேர்தலிலும் பிரசாந்தே வைத்தே வியூகம் அமைத்தது. இவரது வியூகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலன் அளித்ததாகக் கருதப்பட்டது. பிறகு பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கும் பிரசாந்த் வியூகம் அமைத்து உதவி இருந்தார். கடைசியாக, தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு வியூகம் அமைத்தார்.
இச்சூழலில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்துகொண்டார் பிரசாந்த். அதில் அவர், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து பிரசாந்த் மேலும் கூறுகையில், ‘‘தென்னிந்திய மாநிலங்களில் வரும் தேர்தலில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும். தமிழகத்திலும் அதற்கு வியப்பிற்குரிய வகையில் இரண்டு இலக்க வாக்கு சதவிகிதம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது, எட்டு முதல் 12 சதவிதத்திற்கு இடையில் இருக்கும். இதில், வெற்றித் தொகுதிகள் எத்தனை இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரையும் பாஜகவுக்கு ஐந்து சதவிகித வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன.’’ எனத் தெரிவித்துள்ளார்.2021 இல் திமுகவிற்கு தமிழகத்தில் பணியாற்றிய அனுபவத்தில் அடிப்படையில் வியூக நிபுணரான பிரசாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்டு அவர் எந்த தொகுதிகளையும் தெரிவிக்கவில்லை. எனினும், பிரசாந்த் குறிப்பிடும் இரட்டை இலக்க சதவிதத்தில் முக்கியமாக கொங்கு மண்டலம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இப்பகுதியில் கணிசமான செல்வாக்கு தனக்கு இருப்பதாக பாஜக நம்புகிறது.