தமிழகத்தில் மோடி மீண்டும் பிரச்சாரம்

சென்னை: மார்ச் 28 தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. எனவே, தமிழகத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சுற்றுபயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கும், அதேபோல், கூட்டணிகட்சித் தலைவர்கள் வேட்பாளர்களாக களமிறங்கும் தொகுதிகளிலும் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு 3 முறை மோடி வர வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால், அவரது பயணத்திட்டங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் பாஜக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவார்கள் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.