தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

சென்னை: மார்ச் . 9 – தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சில வாரங்களாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்வி வைரஸ் தொற்று, இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான கட்டமைப்புகளும், வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுவாக பருவகால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருட்களும் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கும், பிற வைரஸ் காய்ச்சல்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஓசல்டாமிவிர் மாத்திரைகள் 3 லட்சம் வாங்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. இதைத் தவிர தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்புள்ளன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின்
மருந்தும் போதிய அளவில் உள்ளது.
தமிழகத்தில் பருவ மாற்ற நோய்களைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.