தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்

சென்னை: பிப். 23: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் திருப்பூர், மதுரை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர், இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள அண்ணாமலையின் என் மண், என் மக்கள்’ நடைபயண நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.இதையொட்டி, வரும் 27-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதியம் 2.05 மணிக்கு விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மதியம் 2.30 மணி அளவில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெறும்என் மண், என் மக்கள்’ நடைபயன நிறைவு விழாவுக்கு வந்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அன்று மாலை 4 மணியளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர், மாலையில் நடைபெறும் டிவிஎஸ் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
ராக்கெட் ஏவுதளம்: வரும் 28-ம் தேதி காலைமதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர், காலை 9.30 மணிக்குவஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட திட்டப் பணிகளைத் காணொலி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து காலை 11.05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்துஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி செல்லும் பிரதமர், காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர், பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.