தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க பரிந்துரை

பெங்களூரு: மே 17: காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நிலுவையில் 96 டிஎம்சி நீர்: அப்போது தமிழக அரசின் தரப்பில் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 மே 13-ம் தேதி வரை கர்நாடக அரசு 175.712 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் 79.208 டிஎம்சி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 96.504 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.
இதுதவிர, பிப்ரவரி முதல் மே 14-ம் தேதி வரை பிலிகுண்டுலுவில் 8.548 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 2.496 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில் 6.052 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.தற்போது மேட்டூர் அணையில் 18.040 டிஎம்சி நீரே இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 10 டிஎம்சி நீரில் 3.8 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள‌ 6.2 டிஎம்சி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.17 டிஎம்சி நீரையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரையும் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என வலியுறுத்த‌ப்பட்டது.