தமிழகத்துக்கு 4 மிதக்கும் கப்பல்தளங்கள்

புதுடெல்லி, மார்ச் 10- சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல்தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆன்மிக தலமான ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் 2 தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம், நாட்டின் சமூக பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்.