தமிழகம்: அரசு பெருமிதம்

சென்னை: மே 22 தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ.436 கோடியில் திறன்மிகுவகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம், ரூ.101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், ரூ.1,887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் என கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்து விளங்குகிறது.
கல்வி வளர்ச்சியில் தொடக்கக் கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது; அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டிடம் வலுவாக அமையும்.
காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று கனடாவில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம். கடந்த 3 ஆண்டுகளாக ரூ.590.27 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 37,866 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 22.27 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) ரூ.435.68 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இது பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய சாதனையாகும்.