தமிழகம் முழுவதும் சோதனை

சென்னை: மே 3: விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட், தலைமைச் செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர்.
போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின்போது அவர்களில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்புதல்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தார்.
இதற்கிடையே, ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து போலீஸார் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உட்பட 64 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், விதியை மீறி நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியது, எழுதியது என 421 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் நாளில் அதிகளவில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட நிலையில், இன்றுமுதல் விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.