தமிழக அமைச்சரின் தம்பி பங்களா முடக்கம்

கரூர்: ஆகஸ்ட் . 10 – கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரதுஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே 26-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் ராம் நகர் பகுதியில் தனது மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவிலும் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை அலுவலகத்தில் அசோக்குமார் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். ஆனால், இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று 2 கார்களில் கரூர் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், ராம் நகரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
அப்போது, பொதுப்பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் அழைத்து வந்து இடத்தை அளவீடு செய்து, கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடைபெற்றது.அசோக்குமார் மனைவிக்கு சம்மன்: கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளஅசோக்குமார் வீட்டுக்கு அமலாக்கத் துறையினர் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததால், ராம் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஆவணங்களுடன் அசோக்குமாரின் மனைவி நிர்மலா, அமலாக்கத் துறை முன்பு ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

இதேபோல, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அசோக்குமாரின் ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகத்தில் சோதனைக்கு சென்றபோது, அங்கு யாரும் இல்லாததால், அவரையும் விசாரணைக்கு ஆஜராகக் கூறி நோட்டீஸ் ஒட்டினர்.ராம் நகரில் உள்ள நிலம் பத்திரப் பதிவு தொடர்பாக கரூர் சார் பதிவாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சம்மன் வழங்கினர்.மேலும், அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர்.