தமிழக கவர்னர் ஆதங்கம்

தேனி: பிப். 9: நாடு முழுவதும் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தேனி அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண் விவசாயிகள், பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி, அவினாசிலிங்கம் பல்கலை. துணைவேந்தர் வி.பாரதிஹரிசங்கர் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் மையத் தலைவர் பெ.பச்சைமால் வரவேற்றார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமை வகித்து, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை திறந்துவைத்துப் பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்தபோது உணவு உற்பத்தியில் பின்தங்கி இருந்த நாம், தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம்.
நாட்டின் வளர்ச்சிக்கு விவசாய மேம்பாடு மிகவும் அவசியம். விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். மேலும், விற்பனைச் சந்தையில் விவசாயிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
வேளாண் அறிவியல் மையங்கள், இலவச தங்கும் வசதியுடன்பெண்களுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி, கடனுதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. பயிற்சி பெறும் சுயஉதவிக் குழுக்கள் மூலம், அவர்களின் குடும்பம் மட்டுமின்றி சமுதாயமே உயரும்.