தமிழக சட்டசபையில்காவேரி தீர்மானம்

சென்னை: அக்.9- சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் காலமான பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க, உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வினாக்கள் விடை நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதன்பின்னர், 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவிருக்கிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது.