சென்னை: ஏப்ரல் 16 –
கே என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய 3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என். நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக கடிதம் அளித்துள்ளது.
இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். விதி என் 72 ன் கீழ் சபாநாயகர் அனுமதி கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
இதையடுத்து அதிமுக கொடுத்த கடிதம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம் எல் ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “அதிமுக சார்பில் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை கால்வாய் சீரமைப்பு தொடர்பான கவனம் ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.