தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை : பிப்ரவரி. 12 – சட்டப்பேரவையில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம்பாட வேண்டும் என்ற ஆளுநர் கருத்துக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” இவ்வாறு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, “மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல. கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். அரசு தயாரித்த உரையை படிக்கவேண்டும் என்ற விதியை மீறி கடமையை செய்ய தவறியுள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார், அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது. இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ₹50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வாசிக்கவில்லை என்றாலும் உரையை முழுவதுமாக பதிவேற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.