தமிழக பாஜகவினர் டெல்லி விஜயம்: பிப்.17, 18-ல் தலைமையுடன் ஆலோசனை

டெல்லி பிப்.14- மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. இதன்படி பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கோவை வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழகத்தில் பாஜக 15 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி சட்டப்பேரவை தொகுதி அளவில் பணிக்குழு, பூத் கமிட்டி, பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை நடந்துள்ள பணிகள், தொகுதி நிலவரங்கள் அறிவதற்காக டெல்லியில் வரும் 17, 18-ம் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக, வரும் 16-ம் தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், 39 குழு உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி புறப்படுகின்றனர்.
முன்னதாக, 17-ம் தேதி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவதற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும்இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் உட்பட மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.