தமிழக மீனவர்கள் மீதுகடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: நவ. 4: வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதனை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தரங்கம்பாடி புதுப்பேட்டையை சார்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் சிவக்குமார், மதன், நிதின்குமார் ஆகிய 4 பேர் படகில் மீன்பிடிக்க சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று விடியற்காலை பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர் தமிழ்நாடு மீனவர்களின் படகுகளில் ஏறி 4 பேரையும் தாக்கியுள்ளனர்.கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதன் பிறகு ஜிபிஎஸ் கருவி, டார்ச் லைட், உணவு போன்றவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பி சக மீனவர்களின் உதவியுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செந்தில் குமாருக்கு தலையில் பலத்த காயமும், மதன் குமாருக்கு வலது காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.