தமிழக ரயில்வே திட்டங்கள்

சென்னை:பிப்ரவரி. 2 – தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு 15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு நாளைக்கு 15 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5,200 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,500 கி.மீ. நீளத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தற்போது பெரிய அளவில் உருமாற்றம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 2009-14-ம் ஆண்டில் ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இன்றைய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-14-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7 மடங்கு உயர்வாகும்.
தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுபோல, கேரளத்தில்100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது.
‘அம்ரித் நிலையம்’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் 213 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.