தமிழருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

புதுடெல்லி:அக். 25: ஒடிசாவில் சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படும் தமிழரான வி.கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மாநில அரசில் முக்கியப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். கடந்த 2000-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வு எழுதி ஐஏஎஸ் பெற்ற இவருக்கு ஒடிசா மாநிலப் பிரிவின் பணி கிடைத்தது. ஒடிசாவின் காலஹண்டி மாவட்டம், தர்மகர் சார் ஆட்சியராக இவர் தனது பணியை தொடங்கினார். 2005-ல் மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக அமர்த்தப்பட்டார். பிறகு 2007-ல் கஞ்சாம் மாவட்ட ஆட்சியராக மாற்றலானார். இந்தகாலகட்டங்களில் அவர் பொதுமக்களுக்கு செய்த நற்பணிகள், ஒடிசாவாசிகள் இடையே பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு அவர் சரளமாக ஒடியா மொழி பேசி மக்களுடன் ஒன்றிப்பழகியதும் காரணமானது.
இதனால் 2011-ல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது அலுவலகத்தில் தனிச் செயலாளராக பாண்டியனை பணி அமர்த்தினார். அப்போது முதல் அப்பதவியில் தொடர்ந்த அவர், முதல்வருக்கு மிகவும் நெருக்கமானார். ஒடிசாவின் நிழல் முதல்வர் என்று பேசும் அளவுக்கு இந்த நெருக்கம் இருந்தது.
ஒடிசாவின் அனைத்து துறைகளிலும் பாண்டியனின் நேரடித் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, ஒடிசா மக்களின் மாற்றத்துக்கான முக்கியத் திட்டமான ‘5டி’ திட்டத்தின் பின்னணியில் அதிகாரி வி.கே.பாண்டியன் இருந்தார்.வி.கே.பாண்டியன் தனது பணிக்காலத்தில் குடியரசுத் தலைவரின் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். என்றாலும் இவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.
முதல்வரின் கட்சியான பிஜு ஜனதா தளத்தின் நிர்வாகத்திலும் இவர் தலையிடுவதாக கட்சியினர் புகார் கூறத் தொடங்கினர். இதைக் குறிப்பிட்டு முக்கிய நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து விலகினர்.
சமீப காலத்தில் அரசு ஹெலிகாப்டரில் ஒடிசா முழுவதும் பயணம் செய்து மக்களின் குறைகளை இவர் கேட்டறிந்தார். இது அரசு விதிகளுக்கு புறம்பானது என எதிர்க்கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் விமர்சித்தன. இச்சூழலில் அதிகாரி வி.கே.பாண்டியன் தனது ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்தார். இவரது மனுவை மத்திய பணியாளர் நல அமைச்சகம் ஏற்றுக்கொண்டு, ஐஏஎஸ் பணியிருந்து விடுவித்துள்ளது.
இந்நிலையில் இவரால் உருவாக்கப்பட்ட 5-டி வளர்ச்சித் திட்டம், அமா ஒடிசா, நவீன் ஒடிசா ஆகிய திட்டங்களின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாநில கேபினட் அமைச்சர் அந்தஸ்தும் அளிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி சுஜாதாவும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஒடிசாவின் மிஷன் சக்திதிட்டத்தின் ஆணையராகப் பணியாற்றுகிறார்.
அரசியலில் நுழைகிறார்? மத்தியில் பல வருடங்களாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனியாக செயல்படும் கட்சியாக பிஜு ஜனதா தளம் உள்ளது. மாநிலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருப்பினும், மத்தியில் பிரச்சினை அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும் பிஜு ஜனதா தளத்திற்கு தேசிய அரசியலில் ஒரு உறுதியான தலைவர் இல்லை எனக் கருதப்படுகிறது. இந்த தலைவருக்குரிய பாத்திரத்தை ஏற்பதுடன் கட்சியை தேசிய அளவில் உயர்த்த அதிகாரி வி.கே.பாண்டியன் முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர், பிஜு ஜனதா தளத்தில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் ஒடிசா அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.