தமிழர்கள் நிறைந்த தங்கவயல் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு

பெங்களூர் நவம்பர் 26-
தங்க வயலில் நடந்த நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை விழாவில் விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது: தங்கவயல் எனக்கு மிகவும் பிடித்தமான நகரம். தமிழர் நிறைந்த நகரம். இங்கு நன்னூல் என்ற இலக்கண நூலை தங்கவயலில் தான் பவணந்தி என்ற சித்தர் எழுதியதாக வரலாறு கூறுகிறது. தமிழ் வாழும் தங்கவயலில் நடக்கும் தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் துவக்க கல்வி தமிழில் தான் படித்தேன். நான் வட சென்னையில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்தவன். வீட்டுக்கு மின் விளக்கும் கிடையாது. குடுக்கை விளக்கில் படித்தேன். பெரிதாக படித்து என்ன கிழிக்க போகிறாய் என சிலர் கூறினார்கள். நான் அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையால் படித்தேன். அதிலும் பல பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை படித்து படித்து முன்னேறினேன். மாணவர்களும் படிக்க படிக்க தான் அறிவு வளரும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. நான் எம்.ஏ. இலக்கியம் படித்தேன். பி.இ., எம்.டெக்., பி.ஹெச்.டி., படித்தேன்.மாணவர்கள் விடா முயற்சி செய்து படியுங்கள். உங்கள் கவனம் யாவும் படிப்பில் இருக்கட்டும்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், கொடூரமான கொரோனா வந்து தாக்கினாலும் திருக்குறளுக்கு அழிவே இல்லை என்பதை இங்குள்ள சிறுவர்கள் கூறும் திருக்குறளின் அறமே இதன் பெருமையை காட்டுகிறது.
நான் டாக்டர் அப்துல் கலாம் பணியாற்றிய ராணுவத் துறையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. வில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன்.பல்வேறு சவால்களை அறிவியலில் சாதிக்க வேண்டி உள்ளது. நமது நாட்டின் முதல் ராணுவ விமானம் கர்நாடக மாநிலத்தின் ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் தான் தயாரிக்க பட்டது. அதேபோல ஆளில்லாத விமானம், ஏவுகணைகள் எல்லாம் கூட கர்நாடக மாநிலத்தில் தான் தயாரிக்க பட்டது என்றார்