தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

சென்னை: மார்ச் 20: திமுக, அதிமுக, பாஜ தலைமையிலான கூட்டணிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி தமிழகத்தில் உருவாகியுள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது. அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை கடந்த சனிக்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடத்தப்படும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் பெடாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, படிவம் 26 முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும். வேட்புமனுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.