தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: மே 28: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், முள்ளங்கினாவிளையில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மீனம்பாக்கத்தில் 39.6 டிகிரிசெல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.