
புதுடில்லி, மே 25: தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை இந்தியா திரும்பினார். இதனைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ் மொழி எங்கள் மொழி. இது ஒவ்வொரு இந்தியனின் மொழி. இது உலகின் பழமையான மொழி.’திருக்குறள்’ புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை பப்புவா நியூ கினியாவில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியதற்கு அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வியை எழுப்பின. ஆனால் எனது சுற்றுப் பயணத்தின் போது கரோனா தடுப்பூசி வழங்கியதற்கு அந்நாடுகள் நன்றியை தெரிவித்தன. நான் ஏன் உலகிற்கு தடுப்பூசிகளை கொடுத்தேன் என்று இங்குள்ளவர்கள் என்னிடம் கேட்டார்கள். இது புத்தர், காந்தியின் தேசம் என்று சொல்ல விரும்புகிறேன். எதிரிகள் மீதும் அக்கறை கொள்கிறோம். இந்தியா என்ன நினைக்கிறது என்பதை இன்று உலகம் அறிய விரும்புகிறது. ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா மற்றும் ஜப்பான் தலைவர்களிடமிருந்து நான் பெற்ற அன்பு மற்றும் நன்றியின் மீது அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உண்டு.
சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோர் நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் மட்டுமின்றி, முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் ஆளும் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதுதான் ஜனநாயகத்தின் பலம். இந்திய சமூகத்தின் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீதான சமீபத்திய தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அந்நாட்டில் காலிஸ்தானிக்கு ஆதரவான சக்திகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவின் கவலையை தெரிவித்தார்.இருதரப்பு வர்த்தக உறவுகளை கணிசமாக விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்த இரு பிரதமர்களும் இங்கு தங்கள் பரந்த அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்தனர்.