தருமபுரி அருகே காரில் கடத்தப்பட்ட 7 வயது சிறுவன்: 10 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

தருமபுரி அருகே காரில் கடத்தப்பட்ட 7 வயது சிறுவன்: 10 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.
தர்மபுரி,ஜீன்.10-
தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(30) ஆட்டோ டிரைவராகும். இவர் கோயமுத்தூர் வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் (32)
என்பவரிடம் ரூபாய் 80 ஆயிரம் கார் வாங்க கடன் பெற்றதாக கூறப்படுகிறது. சரவணக்குமார் கொடுத்த கடனை, ஆட்டோ டிரைவர் ராஜசேகரிடம் கேட்டு வந்துள்ளார். கொரோனா கால முடக்கம் முடிந்த பின் வாங்கிய கடனை திருப்பி தருவதாக ராஜகேர், சரவணக்குமாரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார் நேற்று ஆட்டோ டிரைவர் ராஜசேகரின் வீட்டுக்கு சென்று அவரது மகனான ஹரீஸ்(7) என்ற சிறுவனை, கொடுத்த கடனுக்காக சரவணக்குமார் கார் மூலம் சிறுவனை கடத்தி சென்று விட்டான். சிறுவனை மீட்டுதரக்கோரி, தர்மபுரி நகர காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் ராஜசேகர் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்த போலீசார், உடனடியாக இரு தனிப்படைகள் அமைத்து சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனம் மற்றும் வீடுகள் உள்பட பல இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிந்த காரின் ஆதாரத்தை கொண்டும், சிறுவனை கடத்திய நபரின் செல்போன் சிக்னலை வைத்தும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக சிறுவனை கடத்திய சரவணகுமாரின், செல்போன் சிக்னல் கோவை மாவட்டத்தை காட்டியதை தொடர்ந்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட 7 வயது சிறுவனுடன் பதுங்கியிருந்த சரவணகுமாரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். புகார் கொடுத்த சுமார் 10 மணி நேரத்தில் கடனுக்காக கடத்தப்பட்ட சிறுவனை பத்திரமாக மீட்டதுடன், சிறுவனை கடத்திய நபரையும் தர்மபுரி நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட 7 வயது சிறுவனான ஹரீஸ்-ஐ அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட 7 வயது சிறுவனை 10 மணி நேரத்தில் மீட்டு, எதிரியை கைது செய்த தர்மபுரி நகர போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.