தருமபுரி அருகே கார் மீது மினி சரக்கு லாரி மோதி விபத்து: 7 பேர் காயம்

தருமபுரி,நவ.21-
பெங்களூருவிலிருந்து சிதம்பரத்திற்கு ஆப்பிள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி சரக்கு லாரி, தருமபுரி மாவட்டம் பாகல்பட்டி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே இன்று வந்து கொண்டிருந்தது. இந்த மினி லாரியை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு(30) ஓட்டி வந்தார். அவருடன் அதே மாவட்டத்தை சேர்ந்த கிளீனராக கார்த்தி(32) உடனிருந்தார். இந்த நிலையில் மினி சரக்கு லாரிக்கு முன் புனேவில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மினி சரக்கு லாரி மோதிய விபத்தில், தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பழ பாரம் ஏற்றி வந்த மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த விஷ்ணு மற்றும் அவருடன் கிளீனராக வந்த கார்த்தி மற்றும் காரில் வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில்குமார்(42), சூர்யா(34), ஆதித்யாகிருஷ்ணன்(16), சூரியன்(6), மோகனன்(65) ஆகியோர் உள்பட 7 பேர் இந்த விபத்தில் காயம் ஏற்பட்டு சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வாகன விபத்தில் சிக்கி தவித்த 7 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி பணியாளர்கள் ஒன்றிணைந்து சென்டர் மீடியனில் கவிழ்ந்த கிடந்த மினி சரக்கு லாரி மற்றும் சென்டர் மீடியனில் ஏறி நின்ற காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.