தர்மபுரி அருகேஆம்னி பஸ் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயம்


தர்மபுரி,ஏப்.22-
தர்மபுரி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அசாம் மாநிலத்தில் இருந்து வேலைக்காக 35 தொழிலாளர்களுடன் ஒரு ஆம்னி பஸ் கேரளாவுக்கு புறப்பட்டது. இந்த பஸ் நேற்று காலை தர்மபுரி அருகே ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த பஸ்சில் வந்த 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 8 தொழிலாளர்களையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.