தர்மபுரி அருகே இரு மாதங்களாக பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்:தர்மபுரி,பிப்.24-
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ளது பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம். இந்த ஊராட்சிக்குட்பட்டது குடிப்பட்டி, ஈச்சம்பட்டி, தேவர்ஊத்துப்பள்ளம், போயர்கொட்டாய் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பு வீடுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் இந்த கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வந்தவர் ஊராட்சி செயலர் முருகன் ஆவார். இவர் கடந்த இரு மாதங்களாக தொடர் விடுப்பிலும், பணிக்கு வராமலும் இருந்ததால், கூடுதல் பொறுப்பாக பாளையம்புதூர் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் கஜேந்திரனை பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. கூடுதல் பொறுப்பாக பணியமர்த்தப்பட்ட கஜேந்திரனும் இன்று வரை பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி பணிக்கு வராததால், தொடர்ந்து இரு மாதங்களாக சம்மந்தப்பட்ட ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரி செலுத்த முடியாமலும், புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் டேங் ஆப்ரேட்டர்கள் மற்றும் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் இரு மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணி செய்து வருவதால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. இதனால் ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, தொடர்ந்து பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து, முற்றிலும் முடங்கிபோன சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு முறையான ஊராட்சி செயலரை பணியமர்த்தி, ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டு என இவ்வாறு மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டுகொள்ளுமா தருமபுரி மாவட்ட நிர்வாகம்?