தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் எம்.பி. தேர்வாக வாய்ப்பு

புதுடெல்லி, ஜூன் 18- நாடாளுமன்ற மக்களவையின் தற்காலிக தலைவராக காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் (62) நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மக்களவைத் தலைவர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனிடையே, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிக மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவர் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அந்த வகையில் கேரள மாநிலம் மேவலிக்கரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக மக்களவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் 8 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக பணியாற்றி உள்ள இவர், கேரள காங்கிரஸின் செயல் தலைவராக உள்ளார். இதற்கு முன்பு அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.