தற்கொலை செய்து கொண்ட நடிகையின் உருக்கமான கடிதம்

பூந்தமல்லி, செப். 19-‘வாய்தா’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவரான இவர், சினிமா ஆசையால் சென்னை வந்து தனியாக தங்கி இருந்தார். நடிகர் விஷாலின், ‘துப்பறிவாளன்’, விஷ்ணு விஷாலின், ‘ராட்சசன்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் ‘டிக்டாக்’ மற்றும் சமூக வலைதளம் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அழகு மற்றும் இவரது குறும்புத்தனமான நடிப்பு வீடியோக்கள் ‘யூடியூப்’, முகநூல், ‘இன்ஸ்டாகிராம’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளங்களையே உருவாக்கி கொடுத்தது. இந்தநிலையில் நடிகை பவுலின் ஜெசிகா, தனது நண்பர் சிராஜுதின் என்பவரிடம் செல்போனில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. யாரும் எனக்கு ஆதரவாக இல்லை” என விரக்தியுடன் பேசிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அதே பகுதியில் உள்ள தனது நண்பரை நடிகை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவர், பவுலின் ஜெசிகா வசித்த வீட்டுக்கு சென்றபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. அவர் உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டின் உள்ளே நடிகை பவுலின் ஜெசிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.