தற்கொலை

சேலம்: மார்ச். 10 –
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 65). இவர் மணக்காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி விஜயா (58). தங்கராஜ், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் 2 லட்சம் பணம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கராஜ், கொஞ்சம் கொஞ்சமாக வட்டி பணம் மட்டும் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நாளடைவில் லேத் பட்டறையில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தங்கராஜினால் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா அடிக்கடி அவரிடம் அசல் மற்றும் வட்டி பணத்தை சேர்த்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், தன்னிடம் இப்போது பணம் இல்லை, சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். அதற்குள் பணம் கட்டி விடுகிறேன் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் வருமானம் இல்லாததால் பணம் கொடுக்க முடியாமல் தங்கராஜ் தவித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, வட்டி மற்றும் அசல் பணம் கேட்டு அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் விஷம் குடித்து மாமாங்கம் பகுதியில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தங்கராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி விஜயா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவரின் இந்த சாவுக்கு கந்து வட்டி கொடுமையே என எண்ணி கதறி துடித்த விஜயா, இனிமேல் இங்கு வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். தொடர்ந்து அழுதபடியே கணவர் இறந்த துக்கத்தில் விஜயா ஆஸ்பத்திரியில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராஜ்-விஜயா ஆகியோர் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா என்பவர், காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். பணம் கொடுக்காதவர்களை மிரட்டியும் வந்துள்ளார். அந்த வகையில் கந்து வட்டி கேட்டு தங்கராஜை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார், ராஜாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.