
பெங்களூர்: அக். 9-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் எனும் வழக்கறிஞர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீஸ், ராகேஷ் மீது ஜீரோ எப்ஐஆரை பதிவு செய்திருக்கிறது.
வழக்கமாக குற்றம் எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் நடக்கிறதோ அந்த காவல் நிலையத்தில்தான் வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனால், தீவிர குற்றமாக இருப்பின், காவல் நிலைய எல்லையை கணக்கில் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்யப்படும். இதைத்தான் ஜீரோ எப்ஐஆர் என்று சொல்வார்கள். இப்படி பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த வழக்குக்கு எண்ணை கொடுத்து, சாதாரண எப்ஐஆராக மாற்றுவார்கள். பின்னர் புலன் விசாரணை தொடங்கும்.
தற்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீதும் இப்படித்தான் பெங்களூர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவத்சலாவின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புகார்தாரர் கோரியிருந்தார். பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 132 மற்றும் 133 ஆகியவற்றின் கீழ், குற்றவாளி மீது விதான சவுதா போலீசார் ஜீரோ FIR பதிவு செய்துள்ளனர். “அக்டோபர் 6 அன்று, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், புது டெல்லியில் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் கோர்ட் ஹால் எண் 1-இல் மேடையை நோக்கி காலணி வீசினார். அப்போது எதிரில், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்” என்று எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். இது நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் ஒரு பெரிய தாக்குதல் என்றும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதத்தில், சனாதனம் என்ற பெயரில் இந்திய தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட வெளிப்படையான சாதிவெறித் தாக்குதல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மதத்தின் பெயரால் நீதிபதிகள் மீது காலணி வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














