தவறி விழ போன ஜோ பைடன்; தாங்கி பிடித்த ஜோகோ விடோடோ

பாலி, நவ-16
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சென்று உள்ளனர். இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது. வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர். இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளில், பாலி நகரில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பார்வையாளர்களாக சென்றனர். இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜி-20 அமைப்பின் பிற தலைவர்களும் மாங்குரோவ் வன பகுதிக்கு சென்றனர். பின்பு மரக்கன்றுகளையும் அவர்கள் நட்டனர்.
இதன்பின்பு, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை தலைவர்கள் சுற்றி பார்த்தனர். அவற்றில், வழிபாட்டு தலம் ஒன்றை பார்வையிட அதிபர் பைடன் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் இந்தோனேசிய அதிபர் விடோடோ சென்றுள்ளார். இதன்படி, படியில் ஏறி மேலே சென்றபோது, அதிபர் பைடன் திடீரென தவறி விழ போனார். அருகே வழி நடத்தி சென்ற இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, உடனடியாக அவரது கையை பிடித்து, கீழே விழுந்து விடாமல் பாதுகாப்புடன் அழைத்து சென்றார்.