தாக்குப்பிடிக்குமா தமிழகம்

கிருஷ்ணகிரி மே 4: கோடை வெயில், அக்னி நட்சத்திரம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் என்ற வார்த்தைகளைக் கேட்டு பழகிப்போன நம்மை தற்போது வெப்ப அலை, பருவமழை மாற்றம், மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் பயமுறுத்தி வருகின்றனர். அதை ஒருபக்கம் சமாளித்து வந்தாலும், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தற்போது தலைதூக்கத் தொடங்கி விட்டது. இதுகுறித்த நிலைமையை தமிழகம் முழுவதும் ஆராய்ந்த போது கிடைத்த தவல்களின் தொகுப்பு….
சென்னை மண்டலம்: பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. சென்னையில் தற்போது தினமும் ஆயிரம் முதல் 1,072 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் உள்ளன.
சென்னைக்கு தினமும் ஆயிரம் மில்லியன் கனஅடி (1 டிஎம்சி) குடிநீர் தேவை. ஏரிகளில் தற்போது 6 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு அதிகமாகவே நீர் இருப்பு உள்ளது. அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரவே வராது. மேலும், மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர், நெம்மேலியில் 110 மில்லியன் லிட்டர், நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட 3 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 360 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும்.
இதுதவிர, 440 லாரிகள் மூலம் 917 தெரு நடைகள், 8,753 குடிநீர் தொட்டிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 2,100 லாரி நடைகள் விலையில்லாமல் விநியோகிக்கப்படுகிறது என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு மண்டலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் உயரம் 44.28 அடி. இதில் 26.08 அடிக்கு நீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 81 கனஅடி, நீர் திறப்பு விநாடிக்கு 100 கனஅடி. இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வரும். ஆனால் கடந்த 32 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து ‘ஜீரோ’ நிலையில் உள்ளது.
அணையின் உயரமான 52 அடியில் 38.55 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஊற்றுக்கால்வாய்கள் வழியாக ஆற்றில் 12 கனஅடி திறக்கப்படுகிறது. கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை தண்ணீர் விவசாய தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படுகிறது. தற்போது இருமத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 நீர்உறிஞ்சு கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.