தாயுமான சுவாமி கோவிலில் தேரோட்டம்

திருச்சி, மே 13-
திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். ஆலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவாக பார்க்கப்படும் செட்டி பெண்ணுக்கு சிவபெருமான் வைத்தியம் பார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10-ஆம் தேதி காலை 12 மணி அளவில் துவங்கி ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.அதற்கு முன்னதாக தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை வீதி உலா வந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் நூற்றுக்கால் மண்டபத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மையாருக்கு திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது.
நேற்று குதிரை வாகனத்தில் சிவபெருமான் திருவீதி உலா வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திருத்தேரில் எழுந்தருளினார். இந்நிலையில், மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திரு கோவில் சித்திரை திருத்தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஓம் “நமச்சிவாயா “தாயுமானவ என்கிற கோஷங்கள் முழங்க பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.