திகார் சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்கும் டெல்லி மந்திரி

புதுடெல்லி, நவம்பர் 19 – தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.
அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார். பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் மனுக்களை நேற்று முன்தினம் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த ஜாமீன் மனு விசாரணையின் போது சிறையில் மந்திரி விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. மேலும், சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை அளித்த புகாரில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், திகார் சிறையில் இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.