திமுகவுக்கு வாக்கு சதவீதம் சரிவு

சென்னை: ஜூன் 6- தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் அதிருப்தி,மின் கட்டணம், பதிவுக் கட்டணம், சொத்து, வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் திமுக இம்முறை கடந்த 2019 தேர்தலை காட்டிலும் குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று எதிர்த்தரப்பினர் தெரிவித்து வந்தனர்.ஆனால், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த மக்கள் மனநிலை தொடர்பான யூகங்களை பொய்யாக்கி, திமுக சராசரியாக 36 -37 இடங்களை வெல்லும் என்று தெரிவித்தன. அதிமுக கூட்டணிக்கு 1 அல்லது 2 இடங்கள், பாஜகவுக்கு 2 அல்லது 3 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது.ஆனால், தேர்தல் முடிவுகள் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, 39 இடங்களிலும் வென்றுள்ளது. அதேபோல், புதுச்சேரியையும் வசமாக்கி, 40-க்கு 40-ம் திமுக கூட்டணி வசமாகியுள்ளது. அதேநேரம் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலைவிட, இந்த தேர்தலில் திமுக கூட்டணி மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை பெற்றது.அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ல் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதமும், 12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. அதே நேரம், கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதமும், ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது.