திமுகவுடன் தொகுதி பங்கீடு -13ம் தேதி கார்கே சென்னை வருகை

டெல்லி: பிப்ரவரி 2- பிப். 13 ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் பணிகளில் இந்தியா கூட்டணி, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 28ம் தேதி நடைபெற்றது.9ம் தேதி திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில் பிப். 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். சென்னை வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.முதலமைச்சரை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து கார்கே பேச்சுவார்த்தை நடத்துகிறார். 13ம் தேதி முதல்வர்-கார்கே சந்திக்கவுள்ள நிலையில் அன்று தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.