திமுக ஆட்சியை அகற்ற சதி

குமரி: மார்ச் -7 -கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் கலைஞரின் முழு உருவ சிலையை திறந்துவைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்றுவதற்கு எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். மதக்கலவரத்தை தூண்டலாமா, சாதி கலவரத்தை ஏற்படுத்தலாமா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவிக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமர்சனங்களை வைக்கின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று வருகிறோம்.
திமுகவினர் நமக்குள் உள்ள பிரச்னையை தூக்கி வைத்து விட்டு ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர் சிலையை திறந்தால் மட்டும் போதாது, அவரின் லட்சியத்தை நிறைவேற்ற போராட வேண்டும். அண்ணா, கருணாநிதியின் லட்சியங்களை மனதில் ஏற்றுக்கொண்டு கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகள் கிளப்பப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் பிஜேபி இருப்பதாக கூறப்படுகிறது ஜாதி கலவரம் மற்றும் மத கலவரம் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி திமுக அரசை அகற்ற சிலர் முயற்சி செய்து வருவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பகிரங்கமாக கூறியிருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.