திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை:அக். 5-
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்.05) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பூட்டை உடைத்து சோதனை: இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.