திமுக காங்கிரஸ் தொகுதிஉடன்பாடு நாளை கையெழுத்து

சென்னை: மார்ச் 6:
திமுக – காங்கிரஸ் இடையே நாளை தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் அந்தந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. இதுவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம், சிபிஐ, கொங்கு தேசிய மக்கள் கட்சி ஆகியவைகளில் தங்கள் தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிபிஎம், சிபிஐக்கு தலா 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க இருக்கும் சூழலில், காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே நாளை தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நாளை தமிழ்நாடு வருகை தருவதால் தொகுதிகள் இறுதி செய்யப்படுகிறது. நாளை மாலைக்குள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் 10 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.