திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவு

சென்னை: மார்ச் 14:
திமுக கூட்டணியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு ஒருபுறம் நடந்தாலும், அடுத்த கட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
தேர்தல் பணிகளை சிறப்பாக கையாளும் வகையில் பல்வேறு குழுக்களை காங்கிரஸ் கட்சி நியமிக்க உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2019-ல் காங்கிரஸ் போட்டியிட்ட குமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் மூன்றில் போட்டியிட காங்கிரசுக்கு திமுக வலிவுறுத்தியுள்ளது. தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு இன்று மாலை அல்லது நாளை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.