திமுக மீது மோடி குற்றச்சாட்டு

வேலூர்/ ஏப்ரல். 11 – கோவை: கோவையில் ஜவுளி தொழிலை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதிகமின் கட்டணத்தை சுமத்தி தொழில் நடத்த விடாமல் செய்கிறது திமுகஅரசு. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், முதலீடுகளை எல்லாம் தடுத்து, முடக்க நினைக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு திமுக அரசு தடையாக இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று காலை நடந்த பிரச்சாரபொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களான ஏ.சி.சண்முகம் (வேலூர்), சவுமியா அன்புமணி (தருமபுரி), பாலு (அரக்கோணம்), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி), நரசிம்மன் (கிருஷ்ணகிரி) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மண்ணில் ஜலகண்டேஸ்வரர், முருகப்பெருமானை வணங்குகிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை, ‘பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடு, மோசடி, ஊழல்கள் நிறைந்த நாடு இந்தியா’ என்று உலக நாடுகள் விமர்சித்து வந்தன. அப்போதைய ஆட்சி அப்படி இருந்தது. இப்போது, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு, மரியாதை பலமடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
சாதி, மதம், மொழி, பிராந்தியம்என மக்களை பிரித்தாள்வதுதான் திமுகவின் முக்கிய நோக்கம். காங்கிரஸ் – திமுக கூட்டணி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இதுவே காரணம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கைதான மீனவர்களை மீட்கதேசிய ஜனநாயக கூட்டணி அரசுதீவிர முயற்சி செய்தது. 5 மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி உள்ளோம்.
பெண் சக்தியை போற்றும் மண் தமிழகம். ஆனால், பெண் சக்தியைஅழிப்போம் என்கிறார் ராகுல்காந்தி. திமுகவில் சனாதனத்தை அழிப்பேன் என்று ஒருவரும், ராமர்கோயிலை புறக்கணிப்பதாக ஒருவரும் கூறிவருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எப்படி மோசமாக நடத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் பேசினார்.