திமுக வேட்பாளர் பட்டியல்: ஸ்டாலின் ஆலோசனை

சென்னை மா ர்ச் 15:
திமுக வேட்பாளர் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை, காங்கிரஸ், மதிமுக உடனான தொகுதி உடன்படிக்கை ஆகியவை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் ஐயுஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கையை முடித்துவிட்டது.
அதேநேரம் காங்கிரஸ், மதிமுகவுடன் தொகுதி எண்ணிக்கை முடிவாகிவிட்டாலும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் முடிவாகவில்லை. மதிமுகவுக்கு திருச்சியா, விருதுநகரா என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் திருச்சி, விருதுநகர், ஆரணி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளை மாற்றுவது தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார்.
அப்போது மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் வந்து தொகுதியை முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டது. கிட்டதட்ட 30 நிமிடங்கள் முதல்வர் அறிவாலயத்தில் இருந்தார். ஆனாலும், மதிமுக தரப்பில் யாரும் வரவில்லை.இருப்பினும், விரைவில் திமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டியிருப்பதால், அது குறித்தும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்தும், அக்கட்சியினரின் கருத்துக்கள் தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, தலைமைச் செயலகத்துக்கு சென்றார்.