திரிணாமுல் பெண் எம்பி மீது பாஜ எம்பி புகார்

புதுடெல்லி, அக். 16- திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பணத்துக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார் என மகுவா மொய்த்ரா மீது பாஜ எம்பி பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜ எம்பி நிஷிகாந்த் துபே நேற்று கூறுகையில்,‘‘ பணத்துக்காக திரிணாமுல் எம்பி மெகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். மகுவா நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் சம்பந்தப்பட்டது. தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியின் தொழில் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு அவர் இந்த கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர் என்னிடம் கொடுத்தார். இந்த சம்பவங்கள் 2005ம் ஆண்டில் பணத்துக்காக கேள்வி எழுப்பிய எம்பிக்கள் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.இது குறித்து விசாரணை குழு அமைக்க சபாநாயகர் உத்தரவிட வேண்டும்’’ என்றார். நிஷிகாந்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மெகுவா, போலி பட்டதாரி நபர் மற்றும் இதர பாஜ பிரமுகர்களுக்கு எதிரான உரிமை மீறல் பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. முதலில் அந்த விவகாரம் குறித்து சபாநாயகர் விசாரித்த பின்னர் என் மீது தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். நிலக்கரி ஊழலில் அதானி மீது வழக்கு பதிவு செய்த பின்னர் அமலாக்கத்துறை மற்றும் இதர ஏஜென்சிகள் என் வீட்டு வாசல் கதவை தட்டலாம் என குறிப்பிட்டுள்ளார்.