திருச்சூர் பூரம் விழாவுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

திருவனந்தபுரம் : ஏப்..25
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்கு நாதன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழாவில் உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
விழாவின் போது நடைபெறும் யானைகள் அணிவகுப்பு மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை காணவும் பலர் கோவிலுக்கு வருவார்கள்.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த ஆண்டுக்கான திருச்சூர் பூரம் விழா மே மாதம் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கேரள தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மே மாதம் 10-ந் தேதி நடைபெறும் பூரம் விழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்பு மந்திரி ராதா கிருஷ்ணன் கூறும்போது, பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து விழாவில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.
மேலும் கோவிலில் மே 11-ந் தேதி வாண வேடிக்கை நடத்தவும், இது தொடர்பான மாதிரி வாண வேடிக்கையை மே 8-ந் தேதி நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து கோவிலில் பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.