திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி மாசி திருவிழா கோலாகல கொடியேற்றம்

திருச்செந்தூர்: பிப். 14: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும்.கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது. கொடுத்த முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் சிவலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். இந்த ஆலயத்தில் ஆவணித்திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா, மாசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. மாசித் திருவிழாவில், பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மாசித்திருவிழா இன்று புதன்கிழமை கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.