திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி, ஜன. 2- ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் மலர்கள், பல வகையான பழங்கள் கொண்டு கோவில் வெளிப்புறம், உள்புறம் மற்றும் கொடிமரம், பலிபீடம், வைகுண்ட வாசல் உள்ளிட்ட இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.