திருப்பதியில் ரூ.140 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி செப்.2-
ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது. 22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது. ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது. இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.